13 June 2010

பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி (thatstamil.com)


பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி

Azim Premji


வாஷிங்டன்: பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. ஆனால் அது சமூகத்தின் பயன்பாட்டுக்கே போகவேண்டும்... பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொடுத்தால் போதும் என்கிறார் பிரபல ஐடி தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி.

இந்திய ஐடி துறையில் ஜாம்பவான் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் நிறுவனர், தலைவர் அஜீம் பிரேம்ஜி. வர்த்தகத்துடன் நில்லாமல் பல சமூக நோக்குத் திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் 600 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் அளிக்கும் உலகத் தரமான பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்கி வருகிறார், பிரேம்ஜி.

இந்தியப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியாக, இதனை மேற்கொண்டுள்ளார் அவர். 10 வயதாகும் மாணவர்களால், சொந்த தாய்மொழியில் சுயமாக எழுத முடியாத அளவுக்கு இந்திய அடிப்படைக் கல்வி மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்றவே கிட்டத்தட்ட ரூ 450 கோடி செலவு பிடிக்கும் இந்தப் பணியை அஜீம் பிரேம்ஜி மேற்கொண்டுள்ளார்.

அஜீம் பிரேம்ஜியின் இந்த அரிய பணியினை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா, பிரிட்டன் மீடியாக்கள் கட்டுரை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் பில் கேட்ஸ் என்றால் அது அஜீம் பிரேம்ஜிதான் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எப்படி, தனது வருவாயின் ஒரு பகுதியை தொடர்ந்து சமூக நலப் பணிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு செலவிட்டு வருவதைப் போலவே, பிரேம்ஜியும் செய்து வருவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையில் அஜீம் பிரேம்ஜியின் பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில், தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இதுபோன்ற பணிகளுக்காகவே தந்துவிடப் போவதாகவும், தனது வாரிசுகளுக்கு ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே போதும் என்றும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.

"என் காலத்திலேயே எனது சொத்துக்களின் பெரும் பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காகக் கொடுத்து விடப்போகிறேன். என்னுடைய சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். பல தலைமுறைகளுக்கு அதுவே அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும்...

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற பரம்பரை வழக்கம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, பெற்றோரின் பெரும்பகுதி சொத்துக்கள் சமூகத்துக்கே சேர வேண்டும்.

உனக்கு யார் அதிகம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு அதைவிட அதிகமாகத் திருப்பிக் கொடு என்பதுதான் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த தத்துவம்... " என்கிறார் பிரேம்ஜி.

உங்களது பெரும் சொத்துக்களில், பவுண்டேஷனுக்காக எவ்வளவு தரப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு அஜீம் பிரேம்ஜி தந்துள்ள பதில்:

"சிலர் நான் ரூ 450 கோடி தருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அது உண்மையில்லை. அதைவிட அதிகமாகவே அறக்கட்டளைக்கும் சமூகப் பணிகளுக்கும் தரப் போகிறேன். என் சொத்து பிள்ளைகளுக்கல்ல.. சமூகத்துக்கு" என்கிறார்.

தனது சமூகப் பணிகளை சரியாக நிறைவேற்ற, விப்ரோ இன்ப்ராஸ்ட்ரக்சர் எஞ்ஜினீயரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அனுராக் பிகாரியை, விப்ரோ பவுண்டேஷனுக்கு மாற்றியுள்ளார். பிரேம்ஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இந்த அனுராக்.

17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 28வது பணக்காரராக இருக்கும் அஜீம் பிரேம்ஜிதான், ஆசிய அளவில் இந்த அளவு நற்பணிகளைச் செய்து வரும் ஒரே தொழிலதிபர் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் தனிப்பட்ட தனது வாழ்க்கையில் மிகுந்த எளிமையையும் சிக்கனத்தையுவம் கடைப்பிடிப்பவராகத் திகழ்கிறார் பிரேம்ஜி. இதுபற்றி சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிக்கிள் பத்திரிகை குறிப்பிடுகையில், "பெரும் கோடீஸ்வரரான அஜீம் பிரேம்ஜி நிஜத்தில் மிக மிக எளிய வாழ்க்கையையே வாழ்கிறார்..." என்கிறது.

"இன்றும் தனது பழைய ஃபோர்டு காரையே பயன்படுத்தும் பிரேம்ஜி, சமயத்தில் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் போகவும் தயங்குவதில்லை. அவரது மனைவி இன்னும் ஒரு பழைய பியட் காரைத்தான் ஓட்டுகிறார். தனது நிறுவன கேண்டீன்களில் உணவு வீணாவதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. தேவையின்றி விளக்குகள் எரிவதைக் கண்டால் மிகக் கோபமடைவார். நேரம் இருந்தால் தனது துணிகளை தானே சலவை செய்து கொள்கிறார்..."

-இவையெல்லாம் பல்வேறு தருணங்களில் பிரேம்ஜியைப் பற்றி மீடியாவில் வெளிவந்த செய்திகள்.

"ஆனால் அவரது இவையெல்லாம் வெட்கப்பட வேண்டிய விஷயங்களல்ல.. பெருமை கொள்ள வேண்டியவை. இந்த சமூகத்தின் மீது ஒரு பெரும் தொழிலதிபர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடுகள். இன்னொரு பக்கம் அவர் தனது பெரும் சொத்துக்களையே, சமூக மாற்றத்துக்காக செலவழிக்கிறார் என்ற உண்மை, அவரைப் பற்றி அனைத்து மதிப்பீடுகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது" என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.


Regards
Thiruppathi




--














Best Regards,

Sivabalan A