"மிஸ்டர், போதிய கோப்புகள் இல்லாததால் உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது," என்று கூறினால் எப்படி இருக்கும்? இத்தனைக்கும் உங்களிடம் சரியான விசாவுடன் கூடிய கடவுச்சீட்டு, பயணச்சீட்டு, அழைப்பிதழ், தங்குமிடம் என அனைத்தும் இருக்கிறது! என்ன செய்வீர்கள்?
சென்ற வருடம் ஜூன் மாதத்தில் வேலை விஷயமாக ரோமானியாவுக்கு செல்லுமாறு கூறினார்கள். ஏற்கனவே இந்த நாட்டுக்குச் சென்றிருந்தாலும், இந்த முறை ஆர்வம் அதிகமாகவே இருந்தது.
ஜூன் மாதம் என்பதால் வசந்த காலம் ஆரம்பித்திருக்கும். சூரிய ஒளியும் இரவு 9 மணி வரையில் இருக்கும். பல இடங்களையும் சுற்றிப்பார்க்கலாம் என்பதால் எனக்கு ஒரே மகிழ்ச்சி! ( அப்போ வேலை பார்க்க போகலியானு நீங்க நினைக்கறது புரியுது)
ரோமானியாவில் நான் செல்ல வேண்டிய க்ளூச் என்னும் ஊருக்குச் செல்ல பல வழிகள் இருந்தும் நான் துபாய், பிராங்க்பர்ட் வழியாக பயணச்சீட்டைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். துபாய் வழியாக திரும்பும் போது அங்கு 8 மணி நேரத்துக்கு அதிகமாக இடைவெளி இருக்கும்படி பதிவு செய்து கொண்டால் துபாயைச் சுற்றிப் பார்க்க விசா கிடைக்கும் என்பதால் துபாய் வழியைத் தேர்வு செய்தேன். (நம்ம வடிவேலு தான் துபாயப் பத்தி நிறையா சொல்லியிருக்காரே!)
ஆக, எனது பயண வழி சென்னை - துபாய்- ஃப்ராங்க்ஃபர்ட் - க்ளூச்-ஃப்ராங்க்ஃபர்ட் - துபாய் - சென்னை என இருந்தது. சென்னை - துபாய்- ஃப்ராங்க்ஃபர்ட்; ஃப்ராங்க்ஃபர்ட்- துபாய் - சென்னை மார்க்கம் ஒரு விமானத்திலும், ஃப்ராங்க்ஃபர்ட் - க்ளூச் - ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்கம் ரோமானியா நாட்டைச் சேர்ந்த வேறொரு விமானத்திலும் பயணச்சீட்டைப் பதிவு செய்திருந்தனர்.
சென்னையில் எனக்கு ஃப்ராங்க்ஃபர்ட் வரையிலான விமான நுழைவுச்சீட்டு மட்டுமே கொடுத்தனர். ரோமானியா செல்ல வேண்டிய நுழைவுச்சீட்டை ஃப்ராங்க்ஃபர்டில் தான் வாங்க வேண்டும்.
சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை நான்கு மணிக்கு கிளம்பிய விமானம் 6:30 மணியளவில் துபாயை அடைந்தது. வழக்கமாகவே துபாய் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருக்கும். அதுவும் ஐரோப்பா செல்லும் விமானங்கள் என்றால் அது இன்னும் அதிகமாக இருக்கும். எனக்கு ஃப்ராங்க்ஃபர்ட் செல்வதற்கான அடுத்த விமானம் 8 மணிக்கு என்பதால், கொஞ்சம் விரைவாக காலைக் கடன்களை முடித்துவிட்டு நான் ஏற வேண்டிய இடத்துக்கு 7 மணிக்கே சென்று விட்டேன்.
அங்கே கதவைத் (கேட்) திறந்தனர். முதலில் வயதானவர்கள் வரிசையில் நின்றனர், பிறகு நான். எனது முறை வந்தது, அங்கே நின்றிருந்த பரிசோதகரிடம் எனது கடவுச்சீட்டு மற்றும் நுழைவுச்சீட்டைக் கொடுத்தேன்.
அவர், "உங்களிடம் சரியான விசா இல்லியே" என்றார்.
"சரியான விசா இருக்கிறதே. எனக்கு ரோமானியா செல்வதற்கான விசா உள்ளதே! அதுவும் மல்டிபுல் என்ட்ரி" என்றேன்.
"இல்லை நீங்கள் செல்வது ஃப்ராங்க்ஃபர்ட் வழியாக. ஆகவே உங்களுக்கு ஜெர்மனி நாட்டுக்கான செங்கன் (SCHNEGEN) விசா தேவைப்படுமே" என்றார்.
"நான் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ரோமானியா விமானம் ஏறும் வரையில் மட்டுமே இருக்கப் போகிறேன். விமான நிலையத்தைக் கடக்கும் பயணிகளுக்கு (TRANSIT PASSENGER) விசா தேவையில்லேயே. இங்கே நான் துபாய் விமான நிலையத்தில் உள்ளேன். ஆனால் என்னிடம் இந்த நாட்டுக்கான விசா இல்லையே" என்றேன்.
"உங்களுக்கு ரோமானியாவில் இருந்து வந்த அழைப்பிதழைக் காட்டுங்கள்" என்றார்.
நான் எனக்கு வந்திருந்த அழைப்பிதழ், தங்குவதற்குப் பதிவு செய்யப்பட்ட விடுதியின் பதிவுச்சீட்டு, எனது அலுவலக அடையாள அட்டை அனைத்தையும் காண்பித்தேன். அனைத்தையும் பார்த்தவர்...
"நீங்கள் அங்கே ஓரமாக நில்லுங்கள். பிற பயணிகளைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்," என்று சென்றுவிட்டார்.
நான் ஓரமாக நின்று கொண்டிருக்க விமானப் பயணிகள் அனைவரும் என்னை ஏற இறங்க பார்த்து விட்டுச் சென்றனர். இடையில் நான் சென்னையில் உள்ள எங்கள் அலுவலக பயண ஒருகிணைப்பாளரைத் தொடர்பு கொண்டால், "உங்கள் விசா செல்லும்" என்றார்.
விமானத்தில் ஏறுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. என்னிடம் பேசிய பரிசோதகர் மீண்டும் வராததால் வேறொரு பரிசோதகரிடம் சென்றேன். அவர் முதலாமவரிடம் கைப்பேசியில் பேசிவிட்டு, " நீங்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். நீங்கள் ஏற்கனவே பல முறை ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தவர், முன்பு செங்கன் (SCHNEGEN) விசாவும் வாங்கியிருக்கிறீர்கள். ஆனால் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்துக்குச் செல்ல விசா தேவை என்று தெரியாது என்று நீங்கள் சொல்வதை எங்களால் ஏற்க முடியாது. மீறி உங்களை அனுமதித்தால் உங்களுக்குத் தான் பிரச்னை." என்றார்.
"எனக்குத் தெரிந்த வரை கடக்கும் பயணிகளுக்கு விசா தேவையில்லை. விமானம் புறப்படும் நேரமாகிறது, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?" என்றேன்.
"உங்களுக்கு இவர் உதவுவார்.." என்று இன்னொருவரைக் கைகாட்டி விட்டு சென்று விட்டார். நான் ஏற வேண்டிய விமானம் கிளம்ப என்னை துபாய் விமான நிலையத்தின் வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே, எனது கடவுச்சீட்டை வாங்கிவிட்டு ஓர் அறையில் உட்கார வைத்தார்கள். ஓரிரு மணி நேரம் ஆகியும் எவரையும் காணவில்லை. கையில் கடவுச்சீட்டும் இல்லை. இயற்கை அழைப்பிற்குக் கூட செல்ல முடியாத நிலை.
சில மணி நேரம் கழித்து, ஓர் அலுவலர் வந்தார்.
"உங்களுக்கு இன்று இரவு வியன்னா (ஆஸ்டிரியா) வழியாக பயணச்சீட்டைப் பதிவு செய்துள்ளோம்," என்றார்.
"ஆஸ்டிரியாவும் ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள நாடு. வியன்னா விமான நிலையத்துக்குச் செல்ல செங்கன் (SCHNEGEN) விசா வேண்டாமா?" என்றேன்.
"வியன்னா வழியாகச் செல்ல தேவையில்லை" என்று மழுப்பியவர், "உங்களுக்கு இன்றிரவு விமான நேரம் வரைத் தங்க மில்லேனியம் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம். துபாய் விசாவும் தரவுள்ளோம்" என்றார்.
துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது இது தானா என்று நினைத்துவிட்டு, துபாயை அங்கிருந்த நண்பர்களுடன் சுற்றிப் பார்த்தேன்.
எனக்கு வியன்னா வழியாக பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, துபாய் - வியன்னா- புகாரஸ்ட் - க்ளூச் என்றிருந்தது. பிறகு துபாயிலிருந்து கிளம்பிய நான், திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் க்ளூச் நகரைச் சென்றடைந்தேன். கையில் போதுமான அளவு ஈரோ நோட்டுகள் வைத்திருந்ததால் இடைப்பட்ட வேளையில் சாப்பாட்டுக்குக் கவலையில்லாமல் போனது. ஆனால் எனது கைப்பையில் மடிக்கணினியைத் தவிர வேறொன்றும் கொண்டு வரவில்லை. பயணம் தாமதமானதால் துபாயில் ஒரு சட்டையை வாங்கிக் கொண்டேன்.
எனது பயணம் தாமதமாகிறது என்பதை ரோமானியா நண்பர்களிடம் கூறியிருந்ததால் நான் பார்க்க வேண்டிய வேலையையும் தள்ளிப் போட்டிருந்தனர். இந்தப் பிரச்னை ஆகியிருந்ததால், எங்கள் அலுவலக பயண ஒருங்கிணைப்பாளர் திரும்பி வரும்போதும் வியன்னா வழியாகப் பயணச்சீட்டைப் பதிவு செய்து கொடுத்தார்.
சென்னைக்கு வந்த பிறகு துபாய் விமான நிறுவனத்திடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
எனது அடுத்த ரோமானியா பயணத்தின் எகானமி வகுப்பு பயணச்சீட்டுகளை முதல் வகுப்பிலும் உயர் வகுப்பிலும் வருமாறு ஏற்பாடு செய்தனர். ஆக, என்னை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தது அவர்கள் தவறு தான். அதற்கான காரணம் இருக்கைகள் அளவுக்கு மீறிப் பதிவு செய்ததாகவோ (Over Booking) கவனக்குறைவோ இருக்கலாம்.
எனது மன உளைச்சலுக்கு அவர்கள் கொடுத்த இழப்பீடு முதல் வகுப்புப் பயணச்சீட்டு!
ஆனால் வீணான ஒரு நாள்? தாமதமான பணி? எனக்காக் காத்திருந்தோரின் நேரம்?
இது போன்ற நிலைமை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என் பட்டறிவைப் பகிர்கிறேன்...
* நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.
* முடிந்தால் அவர்களது வலைத்தளத்தில் இருந்தோ அல்லது அந்நாட்டுத் தொடர்பு மையத்திலிருந்தோ சட்ட திட்டத்தைப் பற்றி ஒரு நகலை எடுத்துக் கொள்வது நல்லது.
* கைப்பையில் குறைந்தது ஒரு நாளுக்குத் தேவையான உடைகள் வைத்திருப்பது நல்லது.
* ஓரிரு நாட்கள் பயணம் தாமதமானாலும் செல்வுக்குத் தேவையான பணம் வைத்திருப்பது நல்லது.
* ஏதாவது பிரச்னை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்திருக்கவும்.
* உங்கள் அலைபேசி எண்ணிலிருந்து வெளிநாடுகளில் இருந்தும் பேசுவதற்கு ஏதுவாக ரோமிங் வசதியை துவக்கி வைக்கவும்.
* நீங்கள் எவ்வளவு படித்திருந்தாலும் என்ன பதவி வகித்தாலும், நீங்கள் வளரும் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மனதில் கொள்ளவும். எந்த ஐரோப்பிய விமான நிலையமானாலும் நமக்கு சிறப்பு பாதுகாப்பு சோதனை தான். ஆகவே நம்மை மட்டும் தனியாக சோதனையிடுகிறார்கள் என்று பயப்பட வேண்டாம்.
* நீங்கள் எத்தனை முறை அந்த நாட்டுக்கு சென்றிருந்தாலும், உங்கள் அழைப்பிதழ், அழைத்தவர் தொடர்பு எண் போன்றவற்றை வைத்திருக்கவும்.
* நீங்கள் செல்லும் நாட்டின் விமான நிலையத்தில், குடியேறல் சுங்க சோதனை செய்த பின்னரே உங்கள் பெட்டிகளை எடுக்க முடியும். ஆகவே, உங்கள் கோப்புகள் அனைத்தையும் உங்கள் கைப்பையில் (ஹாண்ட் பாக்காஜ்) வைக்கவும். சுங்க சோதனையின் போது கேட்டால் கொடுக்க வேண்டியிருக்கும்.
* நீங்கள் செல்லும் நாட்டில் என்னென்ன மருத்துவ சான்றிதழ்களைக் கேட்கிறார்கள் என்பதை அறிந்து எடுத்து வைத்திருப்பது இன்றியமையாதது.
* முக்கியமான இந்த சட்டத்தை நினைவில் கொள்வது முக்கியம் - உங்களிடம் விசா உள்ளது என்பதற்காக உங்களை அந்த நாட்டில் அனுமதிப்பார்கள் என்று எண்ண வேண்டாம். சுங்க சோதனையாளருக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பொருத்தே அந்த நாட்டில் அனுமதிப்பதும்.
இப்படி வெளிநாட்டுக்குப் போக வேண்டுமா? என்றால், இன்றைய சூழ்நிலையில் அயல் நாட்டுப் பயணங்கள் தவிர்க்க முடியாதது. நல்ல முன்னேற்பாடும் நல்ல நேரமும் இருந்தால் பயணம் இனிதாக இருக்கும்.
உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள்
No comments:
Post a Comment