14 September 2009

நாம் அன்றாடம் செய்யும் பணிகளின் தன்மையைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?

நாம் அன்றாடம் செய்யும் பணிகளின் தன்மையைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?

காலையில் எழுகிறோம், அலுவலகத்துக்குச் செல்கிறோம், கொடுத்த வேலைகளைச் செய்கிறோம், நண்பர்களுடன் உரையாடுகிறோம், வீடு திரும்புகிறோம், நம் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறோம், தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களைப் பார்க்கிறோம், இணையதளங்களில் கும்மியடிக்கிறோம், பிறகு தூங்கச்செல்கிறோம்.

நம் பெரும்பாலானோரின் நாள் இப்படித்தான் செல்கிறது.

நமக்காக நாம் என்ன செய்கிறோம்?

எனக்கு அலுவலகத்தில் நல்ல சம்பளம் கிடைக்கிறது, வீட்டுக்கு வேண்டியதெல்லாம் வாங்கமுடிகிறது. எங்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறித்தான் உள்ளது, வேற என்ன வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

சரி, இந்த முன்னேற்றம் தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

உங்கள் சம்பளம் அதிகரித்த அளவு உங்கள் கனவுகள் நிறைவேறியுள்ளதா? உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா? உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?

முதலில் நாம் அன்றாடம் பார்க்கும் பணிகளின் தன்மையைப் பார்ப்போம். அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. முக்கியமானவை, அவசரமாக முடிக்கவேண்டியவை.
2. முக்கியமானவை, அவசரமற்றவை
3. முக்கியமற்றவை, அவசரமானவை
4. முக்கியமற்றவை, அவசரமற்றவை.

* அலுவலகத்தில் உடனடியாக முடிக்கவேண்டிய வேலை, அலுவலகம் மற்றும் குடும்பத்தில் உடனடி கவனம் தேவைப்படுபவை, தேர்வுகள் போன்றவற்றை முக்கியம் மற்றும் அவசரமானவையில் சேர்க்கலாம். இது போன்ற வேலைகளை நாம் தவிர்க்க இயலாது.

* அலுவலகத்தில் சந்திக்கும் இடையூறுகள், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள், தேவையற்ற சந்திப்புகள், சுவாரஸ்யமான வேலைகள் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமானவையில் சேர்க்கலாம்.

* பொழுதுபோக்கு, அரட்டை, கிசுகிசு, தொலைபேசியில் நேரத்தை செலவிடுவதல் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமற்றவையில் சேர்க்கலாம். இது போன்ற பணிகளால் நமக்கோ நமது முன்னேற்றத்துக்கோ எந்த வகையிலும் பயனில்லை.

* திறமைகளை வளர்த்தல், வேலை/ வாழ்க்கைக்கான திட்டமிடல், நல்ல தொடர்புகளை ஏற்படுத்துதல், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றை முக்கியமானவை அவசரமற்றவையில் சேர்க்கலாம்.

இந்த நான்கு வகையான வேலைகளில் நாம் அதிக நேரம் செலவிடுவது எதில்?

பெரும்பாலானோர் ஒன்று, மூன்று மற்றும் நான்காம் வகையைச் சார்ந்த பணிகளிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்.

எப்பொழுதும் அலுவலகத்தில் அவசரமாக வேலை வருகிறதென்றால் என்ன காரணம்? நம் திட்டமிடுதலில் தவறா அல்லது நமக்குப் போதிய திறமை இல்லையா அல்லது மேலதிகாரியின் தவறா?

நம் உடல் நலம் கெடுவதற்கு நம் வேலைப்பளு காரணமா அல்லது உடல் நலனில் கவனம் செலுத்தாத நம் மெத்தனம் காரணமா?

குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

இவை அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றால் இரண்டாம் வகை வேலைகளில் நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் திறமைகளை வளர்ப்பதன் மூலம் நம் அலுவலகத்தில் பதவி உயர்வுக்குத் தயாராகலாம். குடும்பத்துக்கு தேவையானவற்றைத் திட்டமிடுவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

இப்படி ஒதுக்க முடியாமல் போவதற்குக் காரணம் என்ன? நேரமின்மையா அல்லது பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவிடுவதா?

இன்றைக்கு பெருகிவரும் இணையதளங்களும், சமூக வலையமைப்புகளும் நம்மை வசியப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்பதை உடனுக்குடன் தெரிவிப்பது, நண்பர்களுடன் மின்னாடுவது (CHAT), இணைய குழுமங்களில் கும்மியடிப்பது, பதிவுலகில் அளவளாவுவது என்று பொழுதுபோக்கு விடயங்களில் நேரம் போவதே தெரிவதில்லை.

ஆனால் இதனால் என்ன பயன்?

நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள், பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிந்து கொள்கிறோம் என்றாலும், அது நாம் செலவிடும் நேரத்துக்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கும்.

இதுவே ப்ளாக்ஸ் எனப்படும் பதிவுலகம் என்றால் சொல்லவே வேண்டாம்.

பதிவுலகினால் பல தரப்பட்ட கருத்துகள் தெரியவருகிறது, நல்ல நண்பர்கள் பலர் கிடைக்கிறார்கள் என்றாலும் இது நம் சுயமுன்னேற்றத்துக்கு உதவுகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதிவுலகம், சோசியல் நெட்வொர்க்கிங் எனப்படும் சமூக வலையமைப்புகள் போன்றவை எல்லாம் முக்கியமற்றவை, அவசரமற்றவை என்ற வகையிலேயே சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

முக்கியமற்ற விடயங்களில் செலவிடும் நேரத்தை முக்கியமானவற்றுள் செலவிட்டால் நாமும் முன்னேற முடியும், நம் வாழ்க்கையும் வளமையடையும்.

எது முக்கியம்? முடிவெடுங்கள் நண்பர்களே!

பின் குறிப்பு : இந்தக் கட்டுரை STEPHEN R.COVEY எழுதிய 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE என்ற நூலில் தரப்பட்டுள்ள சில கருத்துகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது


--
Regards,

Sivabalan A

13 September 2009

IT proffessionals Work Story

"ம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

"இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"
அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"



"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintanence and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Just for fun Guys - :-) :-)


--
Regards,

Sivabalan A

05 September 2009

Fwd: just now read the review....

பொக்கிஷம்!

August 15, 2009


தமிழ் சினிமாவை இவர்தான் தாங்கிப் பிடிக்கப் போகிறாராம். எவனுக்குமே படமெடுக்கத் தெரியாது. இவருக்கு மட்டும்தான் சர்வதேசத் தரத்தில் படம் எடுக்கத் தெரியுமாம். இவர் ஒருவர் தான் மேதாவி. மற்றவெனெல்லாம் வெத்து என்று கர்வமாகப் பேசித்திரியும் சேரனுக்கு அடுத்தடுத்து ஆப்பு அடித்துவிட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயக்கண்ணாடி. இப்போது பொக்கிஷம். பாவம், தயாரிப்பாளர் ஜபக்கின் லுங்கிதான் ஒட்டுமொத்தமாக உருவப்பட்டிருக்கிறது. பெரிய இயக்குனர் நடித்து, இரண்டு ஆண்டுகளாக பிரேம் பை பிரேமாக செதுக்கப்பட்டிருக்கும் படம் முதல்நாளே தியேட்டர்களில் காத்தாடுகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரசிகர்கள் ஒரு காட்சியைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் நெளிந்துக்கொண்டே இருக்கிறார்கள். இடைவேளையில் படத்தின் கோராமை தாங்காமல் ஓடியவர்களை பார்த்திருக்கிறோம். இடைவேளைக்கு முன்பே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

சேரன் தன் காதலி பத்மபிரியாவுக்கு கடிதம் எழுதுகிறார். பத்மபிரியா பதிலுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த பதில் கடிதத்துக்கு சேரன் இன்னொரு பதில் கடிதம் எழுதுகிறார். பதில் கடிதத்துக்கு மறுபடியும் பதில். ஒவ்வொரு கடிதக் கருமத்தையும் முழுமையாக சேரனும், பத்மபிரியாவும் படிக்கிறார்கள். இப்படியாக ஒரு இருபது, முப்பது கடிதம் முழுமையாக படிக்கப்படுகிறது. இதுதான் படம். ஐம்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்கள் எல்லாரும் கேணைப்பசங்கள் என்று படமெடுக்கும் போதே சேரன் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது.

இந்த கருமாந்திரப் படத்துக்கு எதற்கு கல்கத்தா, எதற்கு 70 காலக்கட்டம், எதற்கு கம்யூனிஸ்ட், எதற்கு முஸ்லிம், எதற்கு மலேசியா என்று புரியாமலேயே சீத்தலைச் சாத்தனார் மாதிரி தலையை பிய்த்துக் கொண்டு சாக வேண்டியிருக்கிறது. தயாரிப்பாளரின் பணத்தில் சேரன் மஞ்சக் குளிக்க மலேசியா என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படம் பார்க்கும் எந்தத் தயாரிப்பாளரும், 'சேரனை வைத்து இனி படமெடுக்க மாட்டேன்' என்று ஏ.வி.எம். பிள்ளையார் கோயிலில் சத்தியமாக சத்தியம் செய்வார்கள். 'ஆட்டோகிராப்' வெளிவந்தபோது உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ்ரசிகர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்தடுத்து காறி உமிழ்ந்துக் கொண்டு வருகிறார் சேரன். சேரனுக்கு இப்போது உடனடித் தேவை இன்னொரு 'வெற்றிக் கொடி கட்டு', ஆட்டோகிராப் பார்ட்-3 அல்ல என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னாலும் ஆணவமும், அகம்பாவமும் நிறைந்த அவரது மனசின் ஈகோவுக்கு முன்பாக எடுபடப் போவதில்லை.

இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம். படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 





03 September 2009

Be Alert!!!!! Departure to Foreign Countries



"மிஸ்டர், போதிய கோப்புகள் இல்லாததால் உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது," என்று கூறினால் எப்படி இருக்கும்? இத்தனைக்கும் உங்களிடம் சரியான விசாவுடன் கூடிய கடவுச்சீட்டு, பயணச்சீட்டு, அழைப்பிதழ், தங்குமிடம் என அனைத்தும் இருக்கிறது! என்ன செய்வீர்கள்?

சென்ற வருடம் ஜூன் மாதத்தில் வேலை விஷயமாக ரோமானியாவுக்கு செல்லுமாறு கூறினார்கள். ஏற்கனவே இந்த நாட்டுக்குச் சென்றிருந்தாலும், இந்த முறை ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

ஜூன் மாதம் என்பதால் வசந்த காலம் ஆரம்பித்திருக்கும். சூரிய ஒளியும் இரவு 9 மணி வரையில் இருக்கும். பல இடங்களையும் சுற்றிப்பார்க்கலாம் என்பதால் எனக்கு ஒரே மகிழ்ச்சி! ( அப்போ வேலை பார்க்க போகலியானு நீங்க நினைக்கறது புரியுது)

ரோமானியாவில் நான் செல்ல வேண்டிய க்ளூச் என்னும் ஊருக்குச் செல்ல பல வழிகள் இருந்தும் நான் துபாய், பிராங்க்பர்ட் வழியாக பயணச்சீட்டைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். துபாய் வழியாக திரும்பும் போது அங்கு 8 மணி நேரத்துக்கு அதிகமாக இடைவெளி இருக்கும்படி பதிவு செய்து கொண்டால் துபாயைச் சுற்றிப் பார்க்க விசா கிடைக்கும் என்பதால் துபாய் வழியைத் தேர்வு செய்தேன். (நம்ம வடிவேலு தான் துபாயப் பத்தி நிறையா சொல்லியிருக்காரே!)

ஆக, எனது பயண வழி சென்னை - துபாய்- ஃப்ராங்க்ஃபர்ட் - க்ளூச்-ஃப்ராங்க்ஃபர்ட் - துபாய் - சென்னை என இருந்தது. சென்னை - துபாய்- ஃப்ராங்க்ஃபர்ட்; ஃப்ராங்க்ஃபர்ட்- துபாய் - சென்னை மார்க்கம் ஒரு விமானத்திலும், ஃப்ராங்க்ஃபர்ட் - க்ளூச் - ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்கம் ரோமானியா நாட்டைச் சேர்ந்த வேறொரு விமானத்திலும் பயணச்சீட்டைப் பதிவு செய்திருந்தனர்.

சென்னையில் எனக்கு ஃப்ராங்க்ஃபர்ட் வரையிலான விமான நுழைவுச்சீட்டு மட்டுமே கொடுத்தனர். ரோமானியா செல்ல வேண்டிய நுழைவுச்சீட்டை ஃப்ராங்க்ஃபர்டில் தான் வாங்க வேண்டும்.

சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை நான்கு மணிக்கு கிளம்பிய விமானம் 6:30 மணியளவில் துபாயை அடைந்தது. வழக்கமாகவே துபாய் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருக்கும். அதுவும் ஐரோப்பா செல்லும் விமானங்கள் என்றால் அது இன்னும் அதிகமாக இருக்கும். எனக்கு ஃப்ராங்க்ஃபர்ட் செல்வதற்கான அடுத்த விமானம் 8 மணிக்கு என்பதால், கொஞ்சம் விரைவாக காலைக் கடன்களை முடித்துவிட்டு நான் ஏற வேண்டிய இடத்துக்கு 7 மணிக்கே சென்று விட்டேன்.

அங்கே கதவைத் (கேட்) திறந்தனர். முதலில் வயதானவர்கள் வரிசையில் நின்றனர், பிறகு நான். எனது முறை வந்தது, அங்கே நின்றிருந்த பரிசோதகரிடம் எனது கடவுச்சீட்டு மற்றும் நுழைவுச்சீட்டைக் கொடுத்தேன்.

அவர், "உங்களிடம் சரியான விசா இல்லியே" என்றார்.

"சரியான விசா இருக்கிறதே. எனக்கு ரோமானியா செல்வதற்கான விசா உள்ளதே! அதுவும் மல்டிபுல் என்ட்ரி" என்றேன்.

"இல்லை நீங்கள் செல்வது ஃப்ராங்க்ஃபர்ட் வழியாக. ஆகவே உங்களுக்கு ஜெர்மனி நாட்டுக்கான செங்கன் (SCHNEGEN) விசா தேவைப்படுமே" என்றார்.

"நான் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ரோமானியா விமானம் ஏறும் வரையில் மட்டுமே இருக்கப் போகிறேன். விமான நிலையத்தைக் கடக்கும் பயணிகளுக்கு (TRANSIT PASSENGER) விசா தேவையில்லேயே. இங்கே நான் துபாய் விமான நிலையத்தில் உள்ளேன். ஆனால் என்னிடம் இந்த நாட்டுக்கான விசா இல்லையே" என்றேன்.

"உங்களுக்கு ரோமானியாவில் இருந்து வந்த அழைப்பிதழைக் காட்டுங்கள்" என்றார்.

நான் எனக்கு வந்திருந்த அழைப்பிதழ், தங்குவதற்குப் பதிவு செய்யப்பட்ட விடுதியின் பதிவுச்சீட்டு, எனது அலுவலக அடையாள அட்டை அனைத்தையும் காண்பித்தேன். அனைத்தையும் பார்த்தவர்...

"நீங்கள் அங்கே ஓரமாக நில்லுங்கள். பிற பயணிகளைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்," என்று சென்றுவிட்டார்.

நான் ஓரமாக நின்று கொண்டிருக்க விமானப் பயணிகள் அனைவரும் என்னை ஏற இறங்க பார்த்து விட்டுச் சென்றனர். இடையில் நான் சென்னையில் உள்ள எங்கள் அலுவலக பயண ஒருகிணைப்பாளரைத் தொடர்பு கொண்டால், "உங்கள் விசா செல்லும்" என்றார்.

விமானத்தில் ஏறுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. என்னிடம் பேசிய பரிசோதகர் மீண்டும் வராததால் வேறொரு பரிசோதகரிடம் சென்றேன். அவர் முதலாமவரிடம் கைப்பேசியில் பேசிவிட்டு, " நீங்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். நீங்கள் ஏற்கனவே பல முறை ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தவர், முன்பு செங்கன் (SCHNEGEN) விசாவும் வாங்கியிருக்கிறீர்கள். ஆனால் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்துக்குச் செல்ல விசா தேவை என்று தெரியாது என்று நீங்கள் சொல்வதை எங்களால் ஏற்க முடியாது. மீறி உங்களை அனுமதித்தால் உங்களுக்குத் தான் பிரச்னை." என்றார்.

"எனக்குத் தெரிந்த வரை கடக்கும் பயணிகளுக்கு விசா தேவையில்லை. விமானம் புறப்படும் நேரமாகிறது, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?" என்றேன்.

"உங்களுக்கு இவர் உதவுவார்.." என்று இன்னொருவரைக் கைகாட்டி விட்டு சென்று விட்டார். நான் ஏற வேண்டிய விமானம் கிளம்ப என்னை துபாய் விமான நிலையத்தின் வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே, எனது கடவுச்சீட்டை வாங்கிவிட்டு ஓர் அறையில் உட்கார வைத்தார்கள். ஓரிரு மணி நேரம் ஆகியும் எவரையும் காணவில்லை. கையில் கடவுச்சீட்டும் இல்லை. இயற்கை அழைப்பிற்குக் கூட செல்ல முடியாத நிலை.

சில மணி நேரம் கழித்து, ஓர் அலுவலர் வந்தார்.

"உங்களுக்கு இன்று இரவு வியன்னா (ஆஸ்டிரியா) வழியாக பயணச்சீட்டைப் பதிவு செய்துள்ளோம்," என்றார்.

"ஆஸ்டிரியாவும் ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள நாடு. வியன்னா விமான நிலையத்துக்குச் செல்ல செங்கன் (SCHNEGEN) விசா வேண்டாமா?" என்றேன்.

"வியன்னா வழியாகச் செல்ல தேவையில்லை" என்று மழுப்பியவர், "உங்களுக்கு இன்றிரவு விமான நேரம் வரைத் தங்க மில்லேனியம் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம். துபாய் விசாவும் தரவுள்ளோம்" என்றார்.

துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது இது தானா என்று நினைத்துவிட்டு, துபாயை அங்கிருந்த நண்பர்களுடன் சுற்றிப் பார்த்தேன்.

எனக்கு வியன்னா வழியாக பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, துபாய் - வியன்னா- புகாரஸ்ட் - க்ளூச் என்றிருந்தது. பிறகு துபாயிலிருந்து கிளம்பிய நான், திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் க்ளூச் நகரைச் சென்றடைந்தேன். கையில் போதுமான அளவு ஈரோ நோட்டுகள் வைத்திருந்ததால் இடைப்பட்ட வேளையில் சாப்பாட்டுக்குக் கவலையில்லாமல் போனது. ஆனால் எனது கைப்பையில் மடிக்கணினியைத் தவிர வேறொன்றும் கொண்டு வரவில்லை. பயணம் தாமதமானதால் துபாயில் ஒரு சட்டையை வாங்கிக் கொண்டேன்.

எனது பயணம் தாமதமாகிறது என்பதை ரோமானியா நண்பர்களிடம் கூறியிருந்ததால் நான் பார்க்க வேண்டிய வேலையையும் தள்ளிப் போட்டிருந்தனர். இந்தப் பிரச்னை ஆகியிருந்ததால், எங்கள் அலுவலக பயண ஒருங்கிணைப்பாளர் திரும்பி வரும்போதும் வியன்னா வழியாகப் பயணச்சீட்டைப் பதிவு செய்து கொடுத்தார்.

சென்னைக்கு வந்த பிறகு துபாய் விமான நிறுவனத்திடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

எனது அடுத்த ரோமானியா பயணத்தின் எகானமி வகுப்பு பயணச்சீட்டுகளை முதல் வகுப்பிலும் உயர் வகுப்பிலும் வருமாறு ஏற்பாடு செய்தனர். ஆக, என்னை விமானத்தில் ஏற விடாமல் தடுத்தது அவர்கள் தவறு தான். அதற்கான காரணம் இருக்கைகள் அளவுக்கு மீறிப் பதிவு செய்ததாகவோ (Over Booking) கவனக்குறைவோ இருக்கலாம்.

எனது மன உளைச்சலுக்கு அவர்கள் கொடுத்த இழப்பீடு முதல் வகுப்புப் பயணச்சீட்டு!

ஆனால் வீணான ஒரு நாள்? தாமதமான பணி? எனக்காக் காத்திருந்தோரின் நேரம்?

இது போன்ற நிலைமை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என் பட்டறிவைப் பகிர்கிறேன்...

* நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.

* முடிந்தால் அவர்களது வலைத்தளத்தில் இருந்தோ அல்லது அந்நாட்டுத் தொடர்பு மையத்திலிருந்தோ சட்ட திட்டத்தைப் பற்றி ஒரு நகலை எடுத்துக் கொள்வது நல்லது.

* கைப்பையில் குறைந்தது ஒரு நாளுக்குத் தேவையான உடைகள் வைத்திருப்பது நல்லது.

* ஓரிரு நாட்கள் பயணம் தாமதமானாலும் செல்வுக்குத் தேவையான பணம் வைத்திருப்பது நல்லது.

* ஏதாவது பிரச்னை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்திருக்கவும்.

* உங்கள் அலைபேசி எண்ணிலிருந்து வெளிநாடுகளில் இருந்தும் பேசுவதற்கு ஏதுவாக ரோமிங் வசதியை துவக்கி வைக்கவும்.

* நீங்கள் எவ்வளவு படித்திருந்தாலும் என்ன பதவி வகித்தாலும், நீங்கள் வளரும் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மனதில் கொள்ளவும். எந்த ஐரோப்பிய விமான நிலையமானாலும் நமக்கு சிறப்பு பாதுகாப்பு சோதனை தான். ஆகவே நம்மை மட்டும் தனியாக சோதனையிடுகிறார்கள் என்று பயப்பட வேண்டாம்.

* நீங்கள் எத்தனை முறை அந்த நாட்டுக்கு சென்றிருந்தாலும், உங்கள் அழைப்பிதழ், அழைத்தவர் தொடர்பு எண் போன்றவற்றை வைத்திருக்கவும்.

* நீங்கள் செல்லும் நாட்டின் விமான நிலையத்தில், குடியேறல் சுங்க சோதனை செய்த பின்னரே உங்கள் பெட்டிகளை எடுக்க முடியும். ஆகவே, உங்கள் கோப்புகள் அனைத்தையும் உங்கள் கைப்பையில் (ஹாண்ட் பாக்காஜ்) வைக்கவும். சுங்க சோதனையின் போது கேட்டால் கொடுக்க வேண்டியிருக்கும்.

* நீங்கள் செல்லும் நாட்டில் என்னென்ன மருத்துவ சான்றிதழ்களைக் கேட்கிறார்கள் என்பதை அறிந்து எடுத்து வைத்திருப்பது இன்றியமையாதது.

* முக்கியமான இந்த சட்டத்தை நினைவில் கொள்வது முக்கியம் - உங்களிடம் விசா உள்ளது என்பதற்காக உங்களை அந்த நாட்டில் அனுமதிப்பார்கள் என்று எண்ண வேண்டாம். சுங்க சோதனையாளருக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பொருத்தே அந்த நாட்டில் அனுமதிப்பதும்.

இப்படி வெளிநாட்டுக்குப் போக வேண்டுமா? என்றால், இன்றைய சூழ்நிலையில் அயல் நாட்டுப் பயணங்கள் தவிர்க்க முடியாதது. நல்ல முன்னேற்பாடும் நல்ல நேரமும் இருந்தால் பயணம் இனிதாக இருக்கும்.

உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள்