07 August 2009

காப்பி குடிக்கப் பிடிக்குமா?

உங்களுக்குக் காப்பி குடிக்கப் பிடிக்குமா? உங்களிடம் ஒரு கேள்வி!

நீங்கள் குடிக்கும் காப்பியில் எத்தனை லிட்டர் தண்ணீர் உள்ளது தெரியுமா?

ஒரு தேக்கரண்டி காப்பியைத் தயாரிக்க 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம்!

எப்படி?

காப்பிச் செடியைப் பயிரிடுவதில் இருந்து, நமக்கு வீட்டில் குடிக்கும் பக்குவத்தில் வந்து சேரும் வரை செலவாகும் தண்ணீர் தான் மேலே குறிப்பிட்ட 150 லிட்டர். இதை ஆங்கிலத்தில் VIRTUAL WATER ( கானல் நீர் ) என்னும் சொல்லால் குறிப்பிடலாம்.

ஒரு பொருளைப் தயாரிப்பதில் உற்பத்தியாகும் எரிவாயுவைக் கார்பன் கால்தடம் (CARBON FOOTPRINT) என்பதைப் போல, செலவாகும் நீரின் அளவை நீர்க் கால்தடம் ( WATER FOOTPRINT) என்று கூறுகிறார்கள்.

நாம் பயன்படுத்தும் சில பொருள்களின் நீர்க் கால்தடம் கீழே...
* ஒரு காரைத் தயாரிக்க தோராயமாக 150000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம்.
* ஒரு கிலோ மாட்டுக்கறியைத் தயாரிக்க 15000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம்.
* ஒரு கிலோ அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்க தோராயமாக 1000 முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.

கடந்த வருடத்தில், முன்னனி ஏற்றுமதி நாடுகளின் பட்டியலைப் பார்த்தேன். இந்தியாவின் இடம் மிகவும் கவலைக்குறியாதாகவே உள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், நார்வே, சுவீடன் போன்ற நம்மை விடச் சிறிய நாடுகளும் அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிராசில், கனடா போன்ற நம்மை விடப் பெரிய நாடுகளும் ஏற்றுமதில் முன்னனியில் உள்ளன.

இதில் நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், நார்வே, சுவீடன் போன்ற நாடுகள், தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களைப் பெரும்பாலும் இறக்குமதியே செய்கின்றன.

அதிகமாக நீர் தேவைப்படும் உணவுப்பொருள்கள், ஆடை உற்பத்தி மற்றும் இதர பொருள்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து குறைந்த செலவில் (மதிப்பில்) இறக்குமதி செய்துவிட்டு மூளையை மட்டும்மூலதனமாக வைத்துத் தயாரிக்கும் சேவைகளை அதிக மதிப்பில் ஏற்றுமதி செய்வதை நாம் அறிவோமா?

இந்தியாவில் நாமோ ஒரு இடத்தில் காப்பி, தேயிலை, பருத்தி உற்பத்தி, தோல் பொருள்கள் தயாரிப்பு மற்றும் இதர தாணிய வகைகள் என உற்பத்தி செய்ய அதிகளவு தண்ணீரை செலவழித்து விட்டு, இன்னொரு இடத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்ற நிலையில் உள்ளோம்!


மேலே உள்ள படத்தில் பச்சை வண்ணத்தில் உள்ள நாடுகளில் தண்ணீர் கால்தடம் குறைவாக உள்ளதையும் சிவப்பு வண்ணத்தில் உள்ள நாடுகளில் தண்ணீர் கால்த்தடம் அதிகமாக உள்ளதையும் காணலாம். பச்சையில் உள்ள நாடுகளில் இருந்து தான் சிவப்பு வண்ணத்தில் உள்ள நாடுகளுக்கு உணவு தாணியங்கள் ஏற்றுமதியாகிறதாம்! குறைந்த விலைக்கு!!

கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து நாம் வாங்குவதப் போல நம் நாட்டில் அதிகமான நீரைச் செலவழித்துத் உற்பத்தி செய்யும் பொருட்களை அதிக விலையில் விற்றால் எப்படி இருக்கும்?

இப்படி ஒரு காலம் வருமா என்றால் அதற்கான அறிகுறிகள் லேசாக தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு பொருளும் நுகர்வோரின் கைகளில் வந்து சேரும் வரை செலவாகும் நீரின் ( நீர்க் கால்தடம் ) அளவை விற்பனை அட்டையில் அச்சிட வேண்டும் என்று ஐரோப்பாவில் உள்ள சுற்றுச்சூழல் நிறுவனங்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரி இப்படி அச்சிடுவதால் என்ன பயன்?

நுகர்வோரான நமக்கு ஏற்படவிருக்கும் விழிப்புணர்ச்சி தான் மிகப்பெரிய பயன். நாம் அன்றாடம் குடிக்கும் காப்பியைத் தயாரிக்க 300 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்றால் குடிக்கும் நமக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்! நாம் பயன்படுத்தும் பொருள்களையும், அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் தெரிய ஆரம்பிக்கும்.



இன்று பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் புட்டியில் அடைத்த குடிநீரின் விலை 1 லிட்டர் 12 ரூபாய் என்பதை நினைத்துப் பார்க்க எப்படி உள்ளது? ஆனால் ஐரோப்பாவில் தயாராகும் ஏவியன் நிறுவனத்தின் குடிநீரின் விலையோ 1 லிட்டர் 150 ரூபாய்! இதிலிருந்தே தெரிகிறதே அவர்கள் தெளிவாக உள்ளார்கள் என்று!

இதே போல ஒவ்வொரு பொருளையும் நாம் பார்க்க ஆரம்பிக்கும் போது நீரின் அருமையும், வளரும் நாடுகளுக்கு நேர்ந்து வரும் அநீதி பற்றிய விழிப்புணர்வும் சிறுதுளிகளாகப் பரவ ஆரம்பிக்கும்!

சிறுதுளிகள் தானே பெருவெள்ளமாகிறது!

--
Regards,

Sivabalan A

No comments: