முன்குறிப்பு: தமிழ் சினிமாக்களையே மிஞ்சும் அளவுக்கு இந்தக் கட்டுரையில்
ஏகப்பட்ட 'மெசேஜ்'கள் இருக்கின்றன!
பீர்பால் கதைகள் தெரியும்தானே? பீர்பால் கதைகளில் மதியூகம்,
விவேகத்துடன், அனு தினம் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சமாளிக்கவல்ல
வியூகங்களும் இருக்கின்றன. அதை அருமையாக உணர்த்துகிறது 'Solve Your
Problems - The Birbal Way' புத்தகம். ஒரு கதை சொல்லி, அதன் பிரச்னை
சொல்லி, அதை பீர்பால் தீர்க்கும் விதம் சொல்லி, அதில் இருந்து நமக்கான
பாடம் சொல்லி... அடித்து இருக்கிறார்கள் ஆசிரியர்கள் அனிதாமற்றும் லூயிஸ்
வாஸ்.
முட்டாள்களின் பட்டியல்!
கதை: ஒரு முறை அக்பரின் அரண்மனைக்குச் சில உயர் ரக அரபுக் குதிரைகளோடு
வந்தான் வியாபாரி ஒருவன். குதிரைகளின் கம்பீரத்தில் மயங்கிய அக்பர்,
அத்தனை குதிரைகளையும் வாங்கிக்கொண்டார். அதோடு, சில லட்ச ரூபாய்களை
முன்பணமாகக் கொடுத்து, மேலும் பல குதிரைகளைக் கொண்டுவருமாறு பணித்தார்.
'அப்படியே ஆகட்டும் பேரரசே!' என்று பணத்தோடு அவன் கிளம்பிச் சென்றான்.
சில நாட்கள் கழித்து, அக்பர் பீர்பாலிடம் நாட்டில் உள்ள முட்டாள்களின்
பட்டியலைத் தயாரிக்கச் சொன்னார். (அவ்வப் போது பீர்பாலிடம் இப்படிக்
கோக்குமாக்கு சவால்கள்விடுவது அக்பர் வழக்கம்!) பீர்பால் ஒரு பட்டியலைத்
தயாரித்து நீட்டினார். அதில் முதல் பெயர் - அக்பர்! 'நாட்டின்பேரரசனை
முதல் முட்டாளாகக் குறிப்பிடுவதுதான் உன் மதியூகமா?' என்று சினத்தில்
சிடுசிடுத்தார் அக்பர்.
பீர்பாலின் தீர்வு: பொறுமையாகப் பதில் அளித்தார் பீர்பால். ''எந்த
உத்தரவாதமும் இல்லாமல், முன் பின் தெரியாதவனிடம் சில லட்ச ரூபாய்களைத்
தூக்கிக் கொடுத்த செய்கைதான் உங்களுக்கு அந்த அந்தஸ்தைப் பெற்றுத்
தந்தது!''
''ஒருவேளை அந்த வியாபாரி குதிரைகளோடு திரும்பி வந்துவிட்டால்?'' என்று
கேட்டார் அக்பர். ''அப்போது உங்கள் பெயரை நீக்கிவிட்டு, அவன் பெயரை அங்கு
சேர்ப்பேன்!'' என்றார் பீர்பால். ஒரு கணம் யோசித்த அக்பர், தனது தவற்றை
உணர்ந்து அமைதியாகிவிட்டார்.
மெசேஜ்-1: எவருடைய முக தாட்சண்யத்துக்காகவும் அதீத சலுகை வழங்காதீர்கள்.
பிறகு, வருந்துவது நீங்களாகத்தான் இருக்கும். எவர் மீது எப்போது
நம்பிக்கை வைப்பது என்பது சூழ்நிலையைப் பொறுத்தது என்றாலும், அந்தச்
சூழல் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மெசேஜ்-2: உங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் உங்கள் தவற்றைச்
சுட்டிக்காட்டினாலும், கோபப்படாமல் அந்த தவறில் இருந்து நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டிய பாடத்தை உணருங்கள்!
நியாயமா... நாணயமா?
கதை: அக்பர் ஒருநாள், ''பீர்பால் உங்களுக்கு நியாயம் வேண்டுமா அல்லது
தங்க நாணயம் வேண்டுமா என்று கேட்டால், நீங்கள் எதைத்
தேர்ந்தெடுப்பீர்கள்?'' என்று கேட்டார், . (இந்த அக்பருக்கு வேறு வேலை
வெட்டியே இல்லைபோலும்!) ''இதில் என்ன சந்தேகம். தங்க நாணயம்தான்
பேரரசே!'' என்றார் பீர்பால் சட்டென. பீர்பாலிடம் அந்தப் பதிலை
எதிர்பார்க்காத அவையோர் அதிர்ச்சியில் சிலையாக, அக்பருக்கோ இதயமே ஒரு
நொடி நின்று துடித்தது. ''கடைக்கோடி சேவகன் இந்தப் பதிலைச் சொல்லி
இருந்தால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன். புத்திமான், நேர்மையாளன் என்று
நான் முழுமுதல் நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள் இப்படிப் பதில்
சொல்வீர் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை!'' என்று அங்கலாய்த்தார்
அக்பர்.
பீர்பாலின் தீர்வு: ''ஒருவரிடம் எது இல்லையோ, அதைக் கேட்டுப் பெறுவது
மனித இயல்பு பேரரசே!'' என்று அமைதியாகப் பதிலளித்த பீர்பால் மேலும்
தொடர்ந்தார், ''உங்கள் ஆட்சியில் நமது தேசம் முழுக்க, அமைதி, நீதி,
நியாயம் ஆகியவை நிலைகுலையாமல் சீரும் சிறப்புமாகச் செழித்து இருக்கிறது.
ஏற்கெனவே போதுமான நீதி, நியாயம் நிலவும் சூழலில், என்னிடம் இல்லாத தங்க
நாணயத்தைக் கேட்டுப் பெறுவதுதானே இயல்பான மனிதனின் செயலாக இருக்கும்!''
ஒரே நொடியில் அங்கலாய்ப்புச் சுழலில் இருந்து விட்டு விடுதலையாகி,
பூரிப்புக் கடலில் திளைத்த அக்பர் அகமகிழ்ந்து, பீர்பாலுக்கு ஆயிரம் தங்க
நாணயங்களைப் பரிசளித்தார். (அட்றாசக்கை.. அட்றா சக்கை!)
மெசேஜ்-1: மேலதிகாரியையோ, வீட்டுப் பெரியவர்களையோ நியாயமாக 'நைஸ்'
செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தவறவிடவே கூடாது. உள்ளபடியே
உங்கள் சீனியரிடம் பளிச்சிடும் திறமைகளை நீங்கள் பாராட்டினால், நீங்களே
எதிர்பாராத சமயம் ஒன்றில் அது உங்களுக் குத் துணை நிற்கும்.
மெசேஜ்-2: எவரையும் கடிந்துகொள்வதற்கு முன், அவரது செயலின் நோக்கத்தைக்
கணிக்கப் பாருங்கள். ஒருவேளை, நீங்கள் அறியாத ஏதேனும் ஒரு காரணத்துக்காக
அவர் அப்படி நடந்துகொண்டு இருக்கலாம்.
கோழியா... முட்டையா?
கதை: அன்றைய அலுவல்கள் முடிந்து அரசவை கலையும் வேளையில் வந்தார் அந்தப்
பண்டிதர். அறிவார்ந்த மனிதர் என்பதால், அவரைத் தவிர்க்க முடியாமல்
வணங்கினார் அக்பர். ''உமது அமைச்சர்களுக்கு ஒரு சவால் விடுக்க
விரும்புகிறேன். நான் கேட்கும் ஒரே ஒரு கஷ்டமான கேள்விக்குப் பதில்
அளிக்க வேண்டும். அல்லது நூறு எளிமையான கேள்விகளுக்குப் பதில் அளிக்க
வேண்டும். உமது அமைச்சர்கள் தயாரா?'' என்று எகத்தாளமாகக் கேட்டார்
பண்டிதர். அக்பர் பீர்பாலை நோக்க... அவர் பண்டிதர் முன் வணங்கி நின்றார்.
''உங்களது அந்த ஒரே ஒரு கஷ்டமான கேள்விக்குப் பதில் அளிக்க நான் சித்தமாக
இருக்கிறேன்!'' என்றார் பீர்பால்.
பீர்பாலின் தீர்வு: உதடு பிரியாமல் புன்னகைத்த பண்டிதர், ''கோழி முதலில்
வந்ததா... முட்டை முதலில் வந்ததா?'' என்று கேட்டார். ஒரு கணம் கூட
யோசிக்காமல், ''கோழிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை!'' என்று பதில்
அளித்தார் பீர்பால். அந்த மின்னல் வேகப் பதிலில் திகைத்த பண்டிதர், ''அது
எப்படி? முட்டை ஏன் முதலில் வந்திருக்கக் கூடாது?'' என்று கேட்டார்.
''இந்த இரண்டாவது, மூன்றாவது கேள்விகள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.
பண்டிதரின் ஒரே ஒரு கடினமான கேள்விக்கு நான் பதில் அளித்து விட்டேன்
என்பதை நான் நினைவூட்டத் தேவை இல்லை!'' என்றார் பீர்பால் அடக்கமாக!
மெசேஜ்: நீங்கள் ஒருவருக்குப் பொறிவைக்க நினைத்தால், அவர் தப்பிப்பதற்கான
அனைத்து வழிகளையும் அடைத்துவிடுங்கள்!
Thanks Ananda Vikatan.
Subscribe to:
Posts (Atom)